அதிமுக கொள்கைப் பரப்புச்செயலாளராக இருந்த ஜெயலலிதா 1984-ல் கடலூரில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். அப்போது அங்கே மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சந்திரலேகா. அம்மாவட்டத்தில் அரசு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர் ம.நடராசன். அந்த கூட்டத்தை பதிவு செய்வதற்காகவும் ஜெயலலிதாவின் பிற நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதற்காகவும் நடராசன் தன் துணைவியார் சசிகலா நடத்தி வந்த வீடியோ கவரேஜ் நிறுவனத்தை அறிமுகம் செய்கிறார். அப்போதுதான் ஜெயலலிதாவுடனான நட்பு சசிகலாவுக்கு முகிழ்க்கிறது.
அன்றிலிருந்து ஜெயலலிதாவுக்கு திரைப்பட காசட் டுகள் கொடுத்துவந்த சசிகலா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின், ஜெயலலிதா அரசியல்களத்தில் போராட்டங்களை எதிர்கொண்ட சமயத்தில் நெருக்கமாகிறார். ஆரம்பகட்டத்தில் அதிமுக ஜெ, ஜா என்று அணிபிரிந்து தேர்தலைச் சந்தித்த காலத்திலும் அதன் பின்னர் சட்டபேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்டு ஆளுநரிடம் மனுக்கொடுத்த காலத்திலும் அரசியலை விட்டு விலகுவதாக கடிதம் எழுதிய காலகட்டத்திலும் சசிகலா அவர் உடன் இருந்தார். ஒரு கட்டத்தில் போயஸ் தோட்ட இல்லத்திலேயே வந்து தங்க ஆரம்பித்தார். இதையொட்டி சசிகலாவின் குடும்பத்தினரும் பல்வேறு கட்டங்களில் ஜெயலலிதாவுக்கு அணுசரனை ஆயினர். 1991ல் நடந்த தேர்தலில் அதிமுக வென்றபின்னர் இந்த உறவு மேலும் வலுப்பட்டது. சசிகலாவின் அண்ணன் மகன் சுதாகரனை தத்து எடுக்கிறார் ஜெயலலிதா.
சசிகலாவின் இன்னொரு சகோதரரான ஜெயராமன் ஜெவின் ஹைதராபாத் தோட்டத்தில் மின்விபத்தில் மரணம் அடைகிறார். அப்போது அவரது மனைவி இளவரசிக்கு ஆறுதல் சொல்ல தஞ்சை வந்தவர் கையோடு இளவரசியையும் கைக்குழந்தையாக இருந்த இன்றைய போயஸ் தோட்ட நிர்வாகி விவேக் ஜெயராமனையும் அழைத்துவந்தார். சசிகலாவின் அண்ணன் மகன்களில் ஒருவரான டிடிவி தினகரனுக்கு எம்பி பதவியும் கட்சியின் பொருளாளர் பதவியையும் ஒரு கட்டத்தில் கொடுத்திருந்தார்.
சுதாகரனுக்கு நடந்த திருமணத்தின் ஆடம்பரம் 1996-ல் தேர்தல் தோல்விக்குக் காரணம் ஆனது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதானார். உடன் சசிகலாவும் கைது செய்யப்பட்டார். அப்போது எனக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால் சிலநாட்கள் கழித்து சசிகலா என் உடன்பிறவா சகோதரி. அவர் என்னுடன் தானிருப்பார். அவரைப்பற்றி எதுவும் என்னிடம் கேட்கவேண்டாம் என்றும் கூறினார். அன்றிலிருந்து இருவருக்கும் இடையிலான நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. கட்சியில் சின்னம்மா என்ற அந்தஸ்தும், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர் பதவியும் ஜெயலலிதாவின் கண்ணசைவில் காரியமாற்றும் கடமையும் சசிகலாவுக்கு வந்து சேர்ந்தன. திமுக அரசு தொடர்ந்த எல்லா வழக்குகளிலும் சசிகலா சேர்க்கப்பட்டார். அனைத்தையும் இருவரும் சேர்ந்தே எதிர்கொண்டனர். இடையில் ம.நடராசனை ஜெ. ஒதுக்கி வைத்தபோதும் சசிகலா ஜெ பக்கமே இருந்தார். பல்வேறு வழக்குகள், கைதுகள் நடராசனுக்கு எதிராக அதிமுக ஆட்சியில் பாய்ந்தாலும் சசிகலா பதறவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு சமயங்களில் போயஸ்தோட்டத்தில் இருந்து கழற்றிவிடப்பட்டனர். பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டனர். சுதாகரன் கஞ்சாவழக்கு, டிடிவி தினகரன் ஓரங்கப்பட்டது, டாக்டர் வெங்கடேஷ் கட்சிப் பதவி பறிப்பு என்று நிகழ்ந்த நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவே போயஸ் தோட்டத்தை விட்டு சிலநாட்கள் வெளியேறினார். ராவணன், மிடாஸ் மோகன், கலியபெருமாள் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுடன் தொடர்புடைய அனைவரும் கட்சிக்குள் களையெடுக்கப்பட்டனர். சசிகலா குடும்பத்துடன் தொடர்பில்லை என்று ஜெயலலிதாவே வெளிப்படையாக அறிவித்தார். ஏன் ஏன் என்று ஊடகங்களும் கட்சிக்காரர்களும் தவித்தனர். ஆனால் சசிகலா தரப்பில் இருந்து ஒரு சின்ன பெருமூச்சுகூட இல்லை. சிலநாட்களில் மீண்டும் அவர் நட்பு தொடர்ந்தது. இன்றும் அவரது குடும்ப உறுப்பினர்களே ஜெயா டிவி நிர்வாகத்திலும் மிடாஸ் உட்பட பல நிர்வாகங்களிலும் தொடர்கின்றனர். முகங்கள் சில மாறியிருந்தாலும் அனைவரும் சசிகலாவின் உறவினர்களே.
ஆட்சி, அரசியல் பணிகளை ஜெ. கவனித்துக் கொள்கையில் அவரையும் இல்லத்தையும் கவனித்துக் கொள்ளும் பங்கை சசிகலா ஆற்றுவதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவர் போயஸ் தோட்டத்தில்தான் வசிக்கிறார்.
“உடன்பிறவா சகோதரி என்று ஜெ வெளிப்படையாக அழைத்தபின்னர் கட்சிக்குள் சசிகலாவின் பிடியே இறுகியது. 2001 தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட மனுப்போட்டு அதிமுக வென்றபின்னர் முதல்வராக ஆக இயலாத சூழலில் ஓபிஎஸ் தேர்வானார். அவரது தெரிவு சசிகலாவின் கண்ணசைவிலேயே நிகழ்ந்தது. அந்த தேர்வு, அதிமுகவின் தலைவி என்கிற முறையில் ஜெயலலிதாவுக்கு நன்மை பயப்பதாகவே அமைந்தது. ஓபிஎஸ் போன்ற பயபக்தியான தொண்டர் வேறொருவர் கிடைத்திருக்கமாட்டார்” என்று கூறுகிறார் ஓர் அரசியல் விமர்சகர்.
சமீபத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஜெவுடன் சிறைவாழ்க்கையையும் சசிகலாவே பகிர்ந்து கொண்டார். எல்லாவிதங்களிலும் ஜெ.வின் அருகில் பணியாற்றும் சசிகலா இதுவரை எந்த பத்திரிகைக்கும் பேட்டி அளித்ததோ மேடையில் பேசியதோ, தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டதோ கிடையாது. “சசிகலா போன்ற உற்ற தோழி ஜெவின் அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கிடைத்தது அவருக்கு உதவியாகவே இருந்தது. அது உணர்வுபூர்வமான நட்பு. என்றைக்கும் விட்டுக்கொடுக்காத பந்தம். ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியலில் அம்மா என்று ஜெ. வழிபடப்படுவதின் பின்னணியில் சசிகலாவின் பக்கபலமும் சேர்ந்தே இருப்பதை மறுக்க இயலாது” என்கிறார் ஒரு பத்திரிகையாளர்!
டிசம்பர், 2015.